Thursday, 26 September 2013

இனியவை நாற்பது

கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
நூல்
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. (1)
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு. (2)
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு. (3)
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. (4)
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு. (5)

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது. (6)

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. (7)

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது. (8)

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது. (9)

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு. (10)

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல். (11)

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. (12)

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது. (13)

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. (14)

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. (15)

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. (16)

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. (17)

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது. (18)

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது. (19)

சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. (20)

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. (21)

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. (22)

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. (23)

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. (24)

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. (25)

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல். (26)

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது(27)

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். (28)

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது. (29)

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். (30)

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. (31)

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். (32)

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. (33)

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது. (34)

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. (35)

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. (36)

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. (37)

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. (38)

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. (39)

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல். (40)

இன்னா நாற்பது

கடவுள் வாழ்த்து
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
நூல்
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
மந்திரம் வாயா விடின். (1)

பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புநடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு. (2)

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு. (3)

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். (4)

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை. (5)

அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். (6)

ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை. (7)

பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு. (8)

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. (9)

பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு. (10)

உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா
இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல். (11)

தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள் பெண்மை விழைவு. (12)

மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை. (13)

வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. (14)

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். (15)

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு. (16)

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். (17)

உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு. (18)

குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தல் குலமில் வழி. (19)

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு. (20)

ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப் பார்ப்பா னுரை. (21)

யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட வூர். (22)

சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம். (23)

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. (24)

நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது. (25)

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல். (26)

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க் களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல். (27)

கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல். (28)

குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னா
தறியறியா னீரின் பாய்ந்தாட லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. (29)

நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர். (30)

பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை. (31)

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். (32)

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. (33)

ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. (34)

எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். (35)

பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. (36)

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். (37)

பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. (38)

கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். (39)

அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல். (40)

நல்வழி

கடவுள் வாழ்த்து 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை 
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் 
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும் 
தீதொழிய நன்மை செயல் (1)
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி (2) 
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு (3)

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு (4)

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் (5)

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு (6)

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு (7)

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம் (8)

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து (9)

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும் (10)

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது (11)

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு (12)

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல் (13)

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும் (14)

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும் (15)

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி (16)

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! (17)

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம் (18)

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம் (19)

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும் (20)

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான் (21)

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? (22)

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை (23)

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை (24)

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு (25)

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (26)

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் (27)

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான் (28)

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர் (29)

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி (30)

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி (31)

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து (32)

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் (33)

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல் (34)

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு (35)

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம் (36)

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி (37)

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள் (38)

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு (39)

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் (40)

சிறுபஞ்சமூலம்

கடவுள் வாழ்த்து
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா உரைப்பன் சில 
(1)
நூல்
ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)
ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து (2)
பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து (3)
கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து
 (4)
கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
நல்லவர்கள் கேட்பின் நகை
 (5)
உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு
இடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
யீண்டின் இயையும் திரு
 (6)
படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்கு
வாடாதா வன்கண் வனப்பு 
(7)
பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி
 (8)
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான் நஞ்றென்றல் வனப்பு
 (9)
கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து 
(10)
சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை
 (11)
நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்
ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்
நாவகமே நாடின் நகை (12)
கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு
வேறலும் நஞ்சுமா(று) அல்லானைத் - தேறினான்
நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளியை
நாடாதே தீதுரையும் நஞ்சு (13)
இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர்பின்னா நள்ளார்கண் தூயார்ப் - படர்பின்னா
கண்டல் அவர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதம் குறைவு (14)
கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம் (15)
பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்ததீங்(கு) எண்ணி யிருத்தல் - இழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று (16)
கதநன்று சான்றாண்மை தீது கழிய
மதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றால்
கோய்வாயிற் கீழுயிர்க்(கு)ஈ துற்றுக் குரைத்தெழுந்த
நாய்வாயுள் நல்ல தசை (17)
நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்
பட்டார் அகல்அல்கு லார்படிந்து - ஓட்டித்
தொடங்கினார் இல்லகத்து அன்பில் துறவா
உடம்பினான் ஆய பயன் (18)
பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது (19)
தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே
துன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது (20)
கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரை
நள்ளான் உயிரிங்க நாவாடான் - நள்ளானாய்
ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றும்
தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து (21)
பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு (22)
பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்
மூவாது மூவர்நூல் தேற்றதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலும் செல்லா(து) உணர்வு (23)
வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்
துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்
இளங்கால் துறவா தவர் (24)
கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்
வெள்(கு)இல ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்
பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்
துறமதுதீப் பெண்ணின் தொழில் (25)
பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்
கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்து
தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே
வாய்ச்சொல்லே யன்று வழக்கு (26)
வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்
தேன்புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)
ஒல்காதோர் ஒன்று படும் 
(27)
அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்
புறன்நாட்டான் புன்னெறிப் போகாது - புறன்நட்டான்
கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்
பண்டெடுத்துக் காட்டும் பயின்று
 (28)
ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்த
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் - மாணாக்கன்
கற்பனைத்தும் மூன்றுங் கடிந்தான் கடியாதான்
நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய் 
(29)
நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்
உய்தல் ஒருதிங்கள் நாளாகும் - செய்தல்
துணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வணங்கி வலங்கொண்டு வந்து (30)
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன்அடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல் (31)
உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்
செயீர்நோய் பிறன்கண்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
இழிவன்(று) இனிது தவம் (32)
வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை
கேட்பவன் கேடில் பெரும்புலவன் - பாட்டவன்
சிந்தையான் ஆகும் சிறந்தது உலகினுள்
தந்தையான் ஆகும் நலம் (33)
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான்
உடம்பினார் வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்
தொடங்கானேல் சேறல் துணிவு (34)
வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்
செய்ததனால் ஆகும் செழுங்குலமுன் - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம் (35)
இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்
நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல்
தானத்தால் போதும் தவத்தால் சுவர்க்கமாம்
ஞானத்தால் வீடாக நாட்டு (36)
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (37)
தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்
வழீஇய பிறர்பொருளை வெளவார் - கெழீஇக்
கலந்தபின் கீழ்காணார் காணாய் மடவாய்
புலந்தபின் போற்றார் புலை (38)
பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் - பல்லார்முன்
பேணாமை பேணும் தகைய சிறிதெனினும்
மாணாமை மாண்டார் மனம் (39)
பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்
உண்டார் அடிசிலே தோழரில் - கொண்டாரா
யாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பின்
காக்கைக்குக் காப்படுத்த சோறு (40)
உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார்
இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
செவ்வகைச் சேவகர் சென்று (41)
பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கி
ஓவாதான் கோலம் ஒருபொழுதும் - காவாதாள்
யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்
சாரார் பகைபோல் சலித்து (42)
வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெகுவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும்
தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு (43)
நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்
கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால்நாள் கொள்க பெரிது (44)
பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது (45)
வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்
நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற
தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்
ஓவா(து) உரைக்கும் உலகு (46)
அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்
பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒளியாமை
கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை
மன்றுசார் வாசு மனை (47)
நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்
மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என்பெறினும் கொல்லார் இயைந்து (48)
நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி (49)
பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு
முற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத்
தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்
உழுமகற்குக் கேடென்(று) உரை (50)
கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி (51)
உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)
எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்
அரியரா வார்பிறரிற் செல்லாரே உண்ணார்
பெரியரா வார்பிறர் கைத்து (52)
மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை
ஒக்க உடனுறைதல் ஊண்அமைவு - தொக்க
அலவலை அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்து
தலைமகனைத் தாழ்க்கு மருந்து (53)
கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்
வண்டார்பூந் தொங்கல் மகன்தந்தை - வண்தாராய் !
யாப்பார்பூங் கோதை அணிஇழையை நன்கியையக்
காப்பார் கருது மிடத்து (54)
ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்
தாம்பல்வா யோடி நிறைகாத்தல் - ஓம்பார்
நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்
கொடுங்குழை போலக் கொளின் (55)
பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி
என்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்
கல்லார்கற் றாரினத்தார் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை (56)
நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து
ஒல்லை உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி - ஒல்லுமெனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு (57)
தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் - துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான் (58)
பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த
அருள்போகா ஆரறம்என்(று) ஐந்தும் - இருள்தீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப் படுங்குணத்தி னான் (59)
நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்
புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்
பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார் (60)
ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்
சாலாமை நன்றுநூல் சாயினும் - சாலாமை
நன்று தவநனி செய்தல்தீ(து) என்பாரை
இன்றுகா(று) யாம்கண் டிலம் (61)
அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டு
மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக்
கள்ளநோய் காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்
உள்ளநோய் வேண்டா உயிர்க்கு (62)
நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்
பார்அறம் நன்றுபாத்(து) உண்பானேல் - பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால வுடன் (63)
பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)
எடுத்திரந்த உப்(பு)இத் துணையோ(டு) - அடுத்துச்
சிறுபயம் என்னார் சிதவலிப்(பு) ஈவார்
பெறுபயன்பின் சாலப் பெரிது (64)
வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)
அந்த மகன்சார்ந்த தந்தையென்(று) - ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்
குன்றுபோற் கூடும் பயன் (65)
குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) இனிது (66)
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
ஓர்த்(து) பால்மறைத்(து) உண்பான்மேய் - ஓர்த்த
அறமாம்மேல் சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம்பொய் இல்லறமே வாய் (67)
தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்
தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து - தான்பிறரால்
சாவ எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்
வாழ்க எனவாழ்தல் நன்று (68)
நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்
வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீரா
ஆகும்அந் நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்
வேகும்பம் வேண்டான் விடும் (69)
கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழுக்குங்கால் - கொன்றதனை
அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த பாவம் கருது (70)
சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்
உறைக்கிடந்தார் ஒன்றிடையிட்(டு) உண்பார் - பிறைக்கிடந்து
முற்றனைத்தும் உண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்
கற்றனைத்தும் வாழ்வார் கலந்து (71)
ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு (72)
வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலி(பு)அழிந்தார் நாட்(டு)அறைபோய் நைந்தார் - மெலிவொழிய
இன்னவராம் என்னாராய் ஈந்த ஒருதுற்று
மன்னவராய்ச் செய்யும் மதித்து (73)
கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்
இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு (74)
சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்
ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை - சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை
கொல்லாமை நன்றால் கொழித்து (75)
சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றிவாழ் வார் (76)
பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்
தக்கம் படாமை தவமல்லாத் - தக்கார்
இழியினர்க்கே யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்
கழிசினங் காத்தல் கடன் (77)
புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்
கண்கெட்டார் காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)
ஆழ்ந்து நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து (78)
பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வாண் (79)
வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன் - வரைபோல்
கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி (80)
தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவர் - தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி (81)
கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்
இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவை
மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன்மொழியால் ஏத்தப் படும் (82)
காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்
ஓடுபோல் தாரம் பிறந்ததாய் - ஊடுபோய்க்
கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேல் பல்லவர்
ஒத்தினால் என்ன குறை (83)
தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்
பாற்பட்டார் உண்ணார் பழிபாவம் - பாற்பட்டார்
ஏற்றவாது இன்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து (84)
நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொரு பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடு
மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து (85)
சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) - அத்தகத்து
அந்தஇவ் ஐந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பிற் சிட்டன் சிறந்து (86)
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு
எண்ணுங்கால் சாந்தே இலைநறுக்கிட்(டு) - எண்ணுதல்
இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாய
சிட்டனென்(று) எண்ணப் படும் (87)
நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்
பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்
பருத்தி பகர்வழி நாய் (88)
நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்
ஏண்எளிது சேவக னேல்பெரியார் - பேண்எளிது
கொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)
அம்பு பறத்தல் அரிது (89)
இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின்
ஓய்வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா விடாய் விடும் (90)
தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்
தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்க(து)
தழல்தண்என் தோளான் அறிவிலன் ஆயின்
நிழற்கண் முயிறாய் விடும் (91)
பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்
மையார் மடந்தையால் வாழ்வினிது - மெய்யென்றால்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றால்
எத்தவ மானும் படல் (92)
புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்(கு)
அட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்டுண் டாற்றவாழ் வார் (93)
ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ(டு) - ஓவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து (94)
உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)
எண்இடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி
உரைப்பூசல் கோறல் உயர்தவமேல் கங்கைக்
கரைப்பூசை போற்றக் கடை (95)
பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்று
வைத்தார் அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மை
செத்தால் அறிக சிறந்து (96)
வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல் தீக்சொற்க ளோடு - மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம் (97)
பாயிரம்
மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் - கல்லா
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலம்செய் தான்
 (98)